பகல்பத்து உற்சவம் 4ம் நாள்: கிருஷ்ணர் சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் கிருஷ்ணர் சவுரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.108 வைணவத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புரிக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் விழாக்கள் நடைபெறுகிறது. இதில் முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. அதன்தொடர்ச்சியாக பகல்பத்து விழாநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 15ம் தேதி துவங்கியது.

பகல்பத்து உற்சவம் 4ம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து கிருஷ்ணர் சவுரி கொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மகாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவளமாலை, அவுரிசரம் அலங்காரத்தில் புறப்பட்டு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.காலை 7.45 மணி முதல் மதியம் 12 மணி வரை அரையர் சேவை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். மதியம் 1 மணி முதல் 3.30 மணி வரை அரையர் இரண்டாவது சேவை- கம்சவதம், மாலை 5 முதல் 6 மணி வரை பொது ஜனசேவையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி உள்ளிட்ட ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: