சூடுபிடித்த தமிழக அரசியல் களம்: 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை சொந்த தொகுதியில் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி.!!!

சேலம்: சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியில் இருந்து தொடங்கினார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல்  நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே, தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை தமிழக  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நடத்தி வருகிறார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தமிழகம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே, ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்தியப்பின் செய்தியாளர்களிடம் பேட்டிளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற  தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளேன். நாளைய தினம் (இன்று) காலை, எனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட பெரியசோரகையில் இருக்கும் சென்றாயர் ஆலயத்தில் சாமி  கும்பிட்டு, பிரார்த்தனை செய்துவிட்டு பிரசாரத்தை  தொடங்கவுள்ளேன். தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால்,அடிக்கடி எடப்பாடிக்கு வர முடியாது. அதனால், தற்போதே பிரசாரத்தை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தப்பின் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட  பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக, கோயில் வந்த முதல்வர் பழனிசாமிக்கு தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்களையும், பொன்னாடைகளையும், பூச்சென்டுக்ளையும் பெற்று  கொண்டே கோயிலுக்கு செய்தார். கோயிலில் முதல்வரும், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பெருமாளை தரிசனம் செய்த முதல்வர் பழனிசாமி, நடந்து சென்றப்படி, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட  பிரச்சாரத்தை தொடங்கினார். தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வரை வரவேற்க எடப்பாடியில் ஆயிரகணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொடர்ந்து, அதிமுக கொடியும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட வாகனத்தில் தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். முதல்வர்,  எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Related Stories: