பாவூர்சத்திரத்தில் தொழிலாளி கொலை: கூடுதலாக குவார்ட்டர் வாங்கி தராததால் கொன்றேன்: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

பாவூர்சத்திரம்: கூடுதலாக மது வாங்கித் தராததால் நண்பரை கல்லால் அடித்துக் கொன்றதாக பாவூர்சத்திரம் தொழிலாளி கொலையில் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கல்யாணிபுரம் நல்வாழ்வு ஆசிரமம் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுடலைமணி (27). கூலித்தொழிலாளி. 6 வருடங்களுக்கு முன்பு புளியங்குடியைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணை  திருமணம் செய்த சுடலைமணி, தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரே வாரத்தில் மனைவியை பிரிந்து, அக்காள் வீடான வெய்காலிபட்டியில் தங்கி, பாவூர்சத்திரத்தில் மட்டன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 13ம்தேதி இரவு ஆவுடையானூரை அடுத்த மாடியனூர் அருகே உள்ள  தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்து சுடலைமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு  பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. சுடலைமணியுடன் யாருக்கும் முன்விரோதம் இல்லாததால் இந்த வழக்கில் துப்பு துலக்குவதில் போலீசாருக்கு சிரமம் இருந்தது.

இந்நிலையில் சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று இரவு அவர் ஒருவருடன் பைக்கில் செல்வது தெரிந்தது. அந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் ஆவுடையானூர், ஆவுடைசிவன்பட்டி  தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுலைமான் (24) என்பது தெரியவந்தது. அவர், சுடலைமணியை கல்லால் அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.

சுலைமான் போலீசில் அளித்த வாக்குமூலம்: பாவூர்சத்திரத்தில் சுடலைமணி வேலைபார்த்த இறைச்சி கடைக்கு அருகே தான் என் வீடு உள்ளது. இதனால் அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. கடந்த 13ம்தேதி இரவு ஆவுடையானூர் அருகே மதுகுடிக்க சென்றோம். அப்போது அவரிடம்  கூடுதலாக ஒரு குவார்ட்டர் வேண்டும். அதை வாங்கி கொடு என்று கேட்டேன். என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

பணம் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்கிறானே என்று சுடலைமணி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அப்போது நான் போதையில் இருந்ததால் பக்கத்தில் இருந்த பாறாங்கல்லை அவரது தலையில் போட்டு கொன்றேன். மறுநாள்  நண்பரை கொன்று விட்டோமே என்று வருந்தினேன். போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக திருச்செந்தூருக்கு சென்றேன். இருப்பினும் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர், வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Related Stories: