மடிப்பாக்கம் அருகே ரூ.1.28 கோடியில் சீரமைக்கப்பட்ட கிராம குளத்தில் விடப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீர்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் 188 வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கத்தில் கிராம குளம் உள்ளது.  கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1கோடி 28 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு நடை பயிற்சிபாதை, இருக்கைகள்,   தெருவிளக்கு போன்ற வசதிகள் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு  விடப்பட்டது.  இப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் பொழுதுபோக்குதளமாக அங்கு விளையாடி மகிழ்கின்றனர்.  சமீபத்தில் பெய்த மழையின்போது குளக்கரை பகுதியை சுற்றியுள்ள தெருக்களில் மழைநீர்  தேங்கியது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் குளத்தில் விடுவதற்காக சிறு கால்வாய் வெட்டி  குளத்திற்கு செல்லும்படியாக  வழிவகை செய்தனர்.

இந்நிலையில்  அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பினர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட  சிறுகால்வாய் வழியாக செப்டிக் டேங்க் கழிவுகளை வெளியேற்றி வருகின்றனர்.  இதனால் துர்நாற்றத்தினால் அக்கம்பக்கத்தினர் முகம்  சுளிப்பதுடன் குளத்து நீரும் மாசுபட்டு வருகிறது. இதுகுறித்து நடைபயிற்சி மேற்கொள்பவர்களும்  நலச்சங்கம் நிர்வாகிகளும்  மண்டல மாநகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல்  உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், குளத்தை சுற்றி உள்ள நடைபாதையில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், காகிதக்கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.

இரவுநேரங்களில் சமூக விரோதிகள் நாசம் செய்துவிட்டு சென்று விடுகின்றனர். செப்டிக் டேங்க் கழிவுநீர்  குளத்துக்குள் செல்வதை தடுத்தும்,  நடைபாதைகளில் உள்ள  கழிவுகளை அகற்றி சுகாதாரத்தை மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை  வேண்டும், என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்களின்  கோரிக்கையாக உள்ளது.

Related Stories: