பிடென் பதவியேற்புக்கு எளிமையான ஏற்பாடு: வீட்டில் இருந்தே பார்க்க மக்களுக்கு வேண்டுகோள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள பிடெனின் பதவியேற்பு விழா, மிகவும் எளிமையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த மாதம் 3ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இந்நாட்டின் 59வது புதிய அதிபராக அடுத்த மாதம் 20ம் தேதி அவர் பதவியேற்கிறார். அவருடன் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் பதவியேற்கிறார். அதற்கான விழா ஏற்பாடுகளை வெள்ளை மாளிகை செய்து வருகிறது.

வழக்கமாக, அதிபர் பதவியேற்புக்கு வெளிநாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டு, பொதுமக்கள் சூழ பிரமாண்டமாக விழா நடைபெறும். விழாவில் பங்கேற்க 2 லட்சம் மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், கொரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளதால், பதவியேற்பு விழா மிகவும் எளிமையாக நடத்தப்பட உள்ளது. மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.  இணையதளங்கள், டிவியில் பதவியேற்பு விழா நேரலையாக ஒளிபரப்பப்படும். எனவே, தங்கள் வீடுகளில் இருந்தே பொதுமக்கள் இதை கண்டு மகிழலாம் என அதிகாரிகள் கூறினர்.

* பிடெனுக்கு பகிரங்கமாக தடுப்பூசி

கொரோனாவுக்கான தடுப்பூசி அமெரிக்காவில் தற்போது மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊசியை தானும் பொதுமக்கள் முன்னிலையில், வெளிப்படையாக போட்டுக் கொள்வதாக பிடென் அறிவித்துள்ளார். அதேபோல், தற்போதைய துணை அதிபர் மைக் பென்சும், அவரது மனைவியும் வெளிப்படையாக தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். அடுத்த வாரம் இது நடக்க உள்ளது. அதிபர் டிரம்ப், இந்த தடுப்பூசியை பகிரங்கமாக போட்டுக் கொள்ள விரும்பவில்லை.

Related Stories: