தீயணைப்பு, வெடிகுண்டுகளை கண்டறிதல் போன்றவை பற்றி தனியார் செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது, தீயை அணைப்பது, வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது தொடர்பாக தனியார் அமைப்பு செக்யூரிட்டிகளுக்கு 20 நாட்கள் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. ‘இந்தியாவில் காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினர் 30 லட்சம் பேர் உள்ளனர். அதேநேரத்தில் தனியார் செக்யூரிட்டி பணியாளர்கள் 90 லட்சம் பேர் வரையில் உள்ளனர். இந்த 90 லட்சம் செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி அளித்து திறனுள்ளவர்களாக மாற்றும்போது, நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆண்டு கூறியிருந்தார். தற்போது, அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு சட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

* தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து செக்யூரிட்டி பணியாளர்களுக்கும் 20 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

* இந்த பயிற்சியானது வகுப்பறையில் 100 மணி நேரமும், களப்பயிற்சியாக 60 மணி நேரமும் மொத்தம் 20 நாட்கள் வழங்கப்பட உள்ளது.

* சுய பாதுகாப்பு, உடற்தகுதி, பொருட்களை பாதுகாத்தல், தீயணைப்பு, கட்டட பாதுகாப்பு, தீயணைப்பு, மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், வெடிகுண்டுகளை அடையாள காணுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

* சர்வதேச அளவில் இந்திய செக்யூரிட்டி பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுவதன் மூலம், அவர்கள் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பைப் பெற முடியும். இதற்காக 3 பெரிய நிறுவனங்களுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

* சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் செக்யூரிட்டி பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எனவே, புதிதாக வேலைக்கு சேர்க்கும் ஏஜென்சிகள் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

* செக்யூரிட்டி பணிக்கு வருகிறவர்கள் ஆண்களாக இருந்தால் 160 செமீ உயரமும், பெண்கள் 150 செமீ உயரமும் இருப்பது அவசியம்.

* பணியாளர்கள், செக்யூரிட்டி நிறுவனங்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள், புகார்கள் இருந்தால் உடனே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

* ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களைப் படிப்பதற்கான திறன்களைப் பெற்றிருப்பது அவசியம்.

* தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தடுப்பூசி விநியோகத்தில் தனியார் செக்யூரிட்டிகள்

‘கொரோனா தடுப்பூசியை 130 கோடி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் 90 லட்சம் தனியார் செக்யூரிட்டி பணியாளர்கள் உதவி செய்வார்கள். தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக தனியார் செக்யூரிட்டி பணியாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.

Related Stories: