டெல்லியில் நெடுஞ்சாலை தாபாக்களை காலி செய்த விவசாயிகள் போராட்டம்: புலம்பும் உணவக உரிமையாளர்கள்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நோய் அச்சம் மற்றும் விவசாயிகளின்  போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் தங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 90 சதவீதம் வரை அதிகரித்துவிட்டதாக நெடுஞ்சாலை தாபாக்களின் உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.  டெல்லியின் தேசிய நெடுஞ்சாலை 44என்பது, டெல்லியிலிருந்து அரியானா மற்றம் பஞ்சாப்பிற்கும், இமாச்சல் பிரதேசம், ஜம்மு அன்ட் காஷ்மீருக்கும் செல்லும் பிரதான சாலையாகும். இங்குள்ள நெடுஞ்சாலையில் கிடைக்கும் கப் தேநீர், தால் மக்னி போன்றவற்றிற்கு ரொம்பவே பிரபலமான இடமாகும். சாலையெங்கும் திறந்திருக்கும் இங்குள்ள தாபாக்களில் தான் இந்த வகை  பதார்த்தங்கள் கிடைக்கும். ஆனால், கடந்த 8 மாதங்களாக  நிலவும் கொரோனா பாதிப்பு சூழல் மற்றும் தற்போது நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக இங்குள்ள தாபாக்கள் காற்று வாங்கும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளன.

இதனால் இந்த தாபாக்களின் உரிமையார்கள் தங்களது வாடிக்கையாளர்களின் வரவுக்காக காத்துகிடக்கின்றனர். எனினும், தற்போதைய நிச்சயமற்ற நிலையால் தங்கள் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி இருப்பதாக புலம்புகின்றனர்.

இதுபற்றி ரசோய் தாபாவின் உரிமையாளர் சஞ்சய் குமார் சிங் என்பவர் கூறுகையில், “நீங்கள் இங்கே யாரையாவது பார்க்கிறீர்களா? சிங்கு எல்லைக்கு விவசாயிகள் வந்த நவம்பர் 26 முதல் நிலைமை இப்போதுவரை அப்படியே உள்ளது. விவசாயிகளின் போராட்டம் இரண்டு-மூன்று நாட்கள் நீடிக்கும் என்றுதான் நாங்கள் நினைத்தோம். இப்போது, ​​அது எவ்வளவு காலம் தொடரும் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் வருவாய் 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது. ஊழியர்களுக்கே முழு சம்பளத்தையும் கொடுப்பது கடினம் . எனினும், எனது தொழிலாளர்களையும் நான் வீட்டிற்கு அனுப்ப முடியாது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளோம்” என்றார்.

சுமார் 150 இருக்கைகள் கொண்ட தாபாக்களில் வெறும் நான்கைந்து பேர் மட்டுமே அமர்ந்து உணவு உண்கின்றனர். இங்குள்ள கழிப்பிடங்களை பயன்படுத்த மட்டுமே போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள் வருகின்றனர். அவர்களை எவ்வாறு தடுக்க முடியும்? என்கிறார் மற்றொரு தாபா உரிமையாளர். இவரது தாபாவில் பல்வேறு மாநிலங்ககளை சேர்ந்த சுமார் 60 பேர் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மாத சம்பத்தொகை மட்டும் சுமார் ₹ 5 லட்சம்  ஆகும் என்றும் கூறினார். விவசாயிகளின் போராட்டத்தால் அவர்களுக்கு உதவுவதற்காகவும், உணவளிப்பதற்காகவும் போராட்டம் நடைபெறும் இடத்தில் சமூக சமையலறைகள்(லாங்கர்) உருவாக்கப்பட்டுவிட்டன. இவை நெடுஞ்சாலைகளின் தாபாக்களை தற்போது காலிசெய்துவிட்டன என்றால் அது மிகையல்ல.

Related Stories: