ஆண்டர்சன் பேட்டையின் முக்கிய சாலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

தங்கவயல்: தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையின் முக்கிய சாலையில் கழிவு நீர் கால்வாய்  திறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.  தங்கவயல் நகரமன்றம் சார்பில் பல வருடங்களுக்கு முன்பாகவே நகரின் முக்கிய வணிக பகுதியான ராபர்ட்சன்பேட்டையில் உள்ள முக்கிய சாலைகளின் இருபுறமும் சிமெண்ட் பலகைகளிலான நடைபாதை அமைக்கப்பட்டது. அத்துடன் பாதுகாப்பாக இரும்பு கிராதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்கின்றனர். ஆனால் நகரின் மற்றொரு முக்கிய வணிக பகுதியாக உள்ள ஆண்டர்சன்பேட்டையோ பல வருடங்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இதில் ஆண்டர்சன்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து சாம்பியன் ரயில் நிலையம் வரை செல்லும் முக்கிய சாலையின் இருபுறமும், கரடு முரடான கல் பலகைகள் அமைந்த சமதளம் அற்ற நடைபாதை பல வருடங்களாக சீர் குலைந்த நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மிகவும் சிரமத்துடனே கடந்து சென்றனர்.

அதிலும் போக்குவரத்து நிறைந்த இந்த சாலையின் இருபுறமும் தட்டுத்தடுமாறி தான் நடந்து செல்ல முடியும். கடந்த வருடம் ஜூன் மாதம் ஆண்டர்சன்பேட்டையில் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கியது. தூய மரியன்னை பள்ளி தொடங்கி ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலையம் வரை நடை பாதை அமைக்கப்பட்டது. அத்துடன் இந்த பணி முடங்கியது. தொடர்ந்து பஸ் நிலையம் வரை நடைபாதை அமைக்க சாலையோரம் தோண்டப்பட்டு பணி தொடராததால் சாலையோர கழிவு நீர் கால்வாய் சீர்குலைந்த நிலையில் கழிவு நீர் ஓடையாக மாறி விட்டது. இந்த சாலையில் தனியார் கிளினிக்குகள், ஓட்டல்கள்,வணிக கடைகள் உள்ளன. இந்த திறந்த வெளி கால்வாயை கடந்து தான் கடைகளுக்கு செல்ல வேண்டும். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒரு வருடம் கடந்தும் இந்த பணி தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதை கவனத்தில் கொண்டு  பொதுப்பணி துறை பணியை விரைவாக நிறைவு செய்து சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Related Stories: