டெல்லி எல்லைப் பகுதியில் போராட வந்த விவசாயிகளை சாலைகளை மூடி தடுத்தது யார்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் போராட வந்த விவசாயிகளை தடுத்து சாலைகளை மூடியது யார் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று சரமாரி கேள்வியெழுப்பி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சட்ட மாணவர் ரிஷாப் சர்மா என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை உடனடியாக அகற்ற வேண்டும். சாலை முற்றுகை மற்றும் கூட்டங்கள் காரணமாக போக்குவரத்து பயணிகள் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் தேசிய தலைநகரின் பல எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது என  தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதத்தில்,”டெல்லி எல்லையில் உள்ள சாலைகளை நாங்கள் மூடவில்லை. மேலும் அதுகுறித்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சமரச பேச்சுவாரத்தைக்கு நாங்கள் தயாரக இருக்கிறோம். ஆனால் விவசாய சங்கங்கள் தான்  வலுக்கட்டாயமாக அதனை மறுக்கின்றன என தெரிவித்தார். அப்போது டெல்லி அரசு தரப்பு வாதத்தில்,”டெல்லியை பொருத்தமட்டில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காரணம் இல்லாமலா போராட்டத்தில் ஈடுபடுவார்கள்என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார் அதேப்போன்று மற்றொரு மனுதாரரான ஜி.எஸ்.மணி வாதிடும்போது, போராடும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து  கொடுத்து, மனித உரிமை மீறல் எதுவும் ஏற்படாதவாறு நடவடிக்க எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி இதனை நீதிமன்றம் ஏற்கிறது என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,”இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து தீர்வு காணலாம் என நீதிமன்றம் விரும்புகிறது.

ஏனெனில் இது உடனடியாக முடித்து வைக்க வேண்டிய ஒன்றாகும். இல்லையேல் நாடு தழுவிய பிரச்சனையாக மாறிவிடும். மேலும் மத்திய அரசை பொருத்தமட்டில் இந்த விவகாரத்தில் எங்களுக்கும் விவசாயிகளுக்கும் தொடர்பே இல்லை என்பது போன்று அவர்களது பதில்கள் உள்ளது. அதனை ஏற்க முடியாது. இதில் யார் யார் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியுமா?. மேலும் போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை டெல்லியின் உள்ளே வரமுடியாத அளவிற்கு தடுத்தது யார்?, அதேப்போன்று சாலைகளை இரும்பு வேலிகள் கொண்டு மூடியது யார்?

விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து அவர்களை தன்னைத்தானே அடைத்துக் கொண்டார்களா? என சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து நாளைக்குள்(இன்று) பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றும், அதேப்போன்று இந்த விவகாரத்தில் டெல்லி அரியான பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் விளக்கமளிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் விவசாய சங்கங்களையும் எதிர்மனுதாரராக நீதிமன்றம் இணைக்கிறது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

* உச்ச நீதிமன்றம் மீதும் விவசாயிகள் பாய்ச்சல்

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கிசான் மஸ்தூர் சங்கராஷ் கமிட்டி தலைவர் சத்னம் சிங் பன்னு கூறுகையில், ‘‘எங்களை நீதிமன்றம் அழைத்தால், நாங்கள் ஆஜராவது குறித்து ஆலோசிப்போம். அதே சமயம், எங்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவிட்டால், நிச்சயம் அதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துவோம். உச்சநீதிமன்றம் அனைத்திற்கும் மேலான நீதிமன்றமாக இருந்தாலும், அது ஒன்றும் தனி அமைப்பல்ல. அதுவும் அரசின் ஒரு அங்கம்தான். எனவே உச்சநீதிமன்றம் மூலமாக விவசாயிகளை அப்புறப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. உச்சநீதிமன்றம் தனது நம்பிக்கையை இழந்து விட்டது’’ என்றார்.

* குழு அமைப்பதால் பிரயோஜனம் இல்லை

போராட்ட களத்தில் உள்ள ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் சபா சங்க தலைவர் அபிமன்யு கோஹர் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றம் மூலம் புதிய குழு அமைப்பதால் தீர்வு எட்ட முடியாது. 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் எங்கள் கோரிக்கை. இதற்கு முன், மத்திய அமைச்சர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதுகூட ஒரு கமிட்டி போலத்தான் செயல்பட்டது. எனவே கமிட்டி அமைத்து பிரயோஜனம் இல்லை’’ என்றார். பாரதிய  கிசான் சங்க பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கூறுகையில், ‘‘சட்டத்தை இயற்றும் முன்பாக இதுபோல குழு அமைத்து விவசாயிகளிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். அதை விட்டு இப்போது அமைப்பது பயனில்லை. எனவே, 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட்ட பிறகு புதிய குழு அமைப்போம்’’ என்றார்.

Related Stories: