11 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை- போடி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்: உசிலம்பட்டி-ஆண்டிபட்டி வரை இயக்கம்

ஆண்டிபட்டி: மதுரை - போடி அகல ரயில் பாதையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சோதனை ஓட்டமாக ஆண்டிபட்டி வரை ரயில் இயக்கப்பட்டது. மதுரை - போடி இடையே கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட அகல ரயில் பாதை திட்டப்பணிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கி.மீ தூர பணிகள் நிறைவடைந்தது. தொடர்ந்து உசிலம்பட்டியில் இருந்து தேனி வரை பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. இதில் உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை 21 கி.மீ தூர அகலப்பாதைகள் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து மத்திய ரயில் போக்குவரத்து அமைச்சக தெற்கு சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையில் மதுரை கோட்ட மேலாளர் லெனின் உள்ளிட்ட ரயில்வே துறை உயரதிகாரிகள் நேற்று வழித்தடத்தை ஆய்வு செய்தனர்.

நேற்று மாலை உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை 21 கி.மீ தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியில் இருந்து மாலை 5.10 மணிக்கு கிளம்பிய ரயில், மாலை 5.35 மணிக்கு ஆண்டிபட்டி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் வந்த ரயிலை காண ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக கோஷங்களை எழுப்பினர். தேனி எம்பி ரவீந்திரநாத் மலர் தூவி வரவேற்றார்.

Related Stories: