வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தபால் ஓட்டு வசதி?: கோரிக்கையை பரிசீலிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் இசைவு..!!

டெல்லி: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பளிப்பது குறித்து பரிசீலிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலர், தேர்தல்களில் வாக்களிக்க தங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அடுத்த ஆண்டு 5 மாநிலங்களுக்கு பேரவை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு தரவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும். இதனை தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தி தர மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு கடந்த நவம்பர் 27ம் தேதி தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து பின்னர் தபால் மூலம் அவற்றை பெற தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இந்த கோரிக்கையை  மத்திய சட்டத்துறை அமைச்சகம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும் கட்சிகளின் ஒருமித்த கருத்தை அறிவதற்காக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேநேரம் வெளிநாடுகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வாக்குபதிவில் பெரும் குளறுபடியை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: