மகளிர் உலக கோப்பை 2022 புதிய அட்டவணை வெளியிட்டது ஐசிசி

வெலிங்டன்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட மகளிர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான புதிய அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.  போட்டிகள் 2022 மார்ச் 4ம் தேதி முதல் ஏப்.3ம் தேதி வரை நியூசிலாந்தின் 6 நகரங்களில் நடைபெறும்.

இத்தொடர் ஏற்கனவே 2021 மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததுடன், போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் தீவிரமானதை அடுத்து, ஆஸ்திரேலியாவில்  நடைபெற இருந்த ஆண்களுக்கான டி20 உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகளி உலக கோப்பை ஒருநாள் போட்டியும் 2022க்கு தள்ளி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்தது.இந்நிலையில், இத்தொடருக்கான புதிய அட்டவணையை ஐசிசி நேற்று  வெளியிட்டது. அதன்படி 2022, மார்ச் 4ம் தேதி நியூசிலாந்தின் தவுரங்கா நகரில் தொடக்க போட்டியும், ஏப்.3ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில் பைனலும் நடக்க உள்ளன. மொத்தம் 31 போட்டிகள். நியூசிலாந்தின் தவுரங்கா, ஆக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்ட்சர்ச், ஹாமில்டன், டுனடின் என 6 நகரங்களில் நடைபெறும். இறுதிப்போட்டி உட்பட பல போட்டிகள் பகலிரவு ஆட்டமாக இருக்கும்.

இந்த போட்டியில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்க உள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இந்தியா ஆகிய 5 நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. எஞ்சிய 3 நாடுகள் ஐசிசி தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படும் (இலங்கை 2021, ஜூன் 26 - ஜூலை 10).

பரிசுத் தொகை உயர்வு

* மகளிர் உலக கோப்பைக்கான பரிசுத் தொகை ரூ.28.60 கோடி. 2017ம் ஆண்டு வழங்கப்பட்டதை விட இது 60% அதிகமாகும்.

* நடப்பு சாம்பியன் இங்கிலாந்து. 2017 பைனலில் இந்தியாவை 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

* அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 6 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் கோப்பையை முத்தமிட்டுள்ளன. இந்தியா 2005, 2017ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

* இந்தியா லீக் சுற்றில் விளையாடும் 7 ஆட்டங்களும் பகல்/இரவு ஆட்டங்களாக உள்ளன. இந்திய ரசிகர்கள் போட்டியைக் காண ஏதுவாக  போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: