இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்த முறை தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு: ஆஸி. பவுலர் ஸ்டார்க் பேட்டி

அடிலெய்ட்: ‘‘இந்தியாவுக்கு எதிரான கடந்த 2018-19 டெஸ்ட் தொடரில், நாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள இந்த முறை நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது’’ என்று ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அடிலெய்டில் துவங்க உள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

70 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, இந்திய அணி சாதனை படைத்தது. நடப்பு டெஸ்ட் தொடர் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது: டெஸ்ட் தொடரை இழக்க எந்த அணியும் விரும்பாது. அதிலும் சொந்த மண்ணில் தொடரை இழப்பது என்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தும். நாங்கள் கடந்த முறை சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தோம் என்பது உண்மைதான். அப்போது இந்திய அணி மிகமிக வலிமையாக இருந்தது. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலுமே இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதனால் நாங்கள் தோல்வியடைந்தோம். இதை நாங்கள் மறுக்க விரும்பவில்லை. ஆனால் இம்முறை அப்படி இருக்காது. கடந்த தொடரில் நாங்கள் செய்த தவறுகள் அனைத்தையும் இந்த முறை திருத்திக் கொள்ள, இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பந்து வீச்சில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். என்னைச் சுற்றி எழும் விமர்சனங்கள் ஏதும் எனக்கு எட்டுவதில்லை. ஏனென்றால் ஓராண்டுக்கு முன்னதாகவே நான், இன்ஸ்டாகிராம், ட்வீட்டல் உள்ளிட்ட  சோஷியல் வலைதளங்களில் இருந்து வெளியேறிவிட்டேன். அதில் விமர்சனம் என்ற பெயரில் ஆளாளுக்கு ஆலோசனை கூறுகின்றனர். அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டால், நான் எண்ணியபடி எனது பந்துவீச்சு இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள மிட்செல் ஸ்டார்க், அவற்றில் 244 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 96 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர், அவற்றில் 184 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Stories: