மெக்டெர்மாட், வைல்டர்மத் அபார சதம்: பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது

சிட்னி: இந்தியா லெவன் - ஆஸ்திரேலியா ஏ அணிகளிடையே நடந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி/தோல்வியின்றி டிராவில் முடிந்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா லெவன் முதல் இன்னிங்சில் 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (48.3 ஓவர்). பிரித்வி 40, கில் 43, பூம்ரா 55*, சிராஜ் 22 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெறும் 108 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா லெவன் பந்துவீச்சில் ஷமி, சைனி தலா 3, பூம்ரா 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். 86 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா லெவன் 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன் எடுத்திருந்தது. விஹாரி 104, பன்ட் 103 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில், கடைசி நாளான நேற்று இந்தியா லெவன் அதே ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து, 473 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 25 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. ஹாரிஸ் 5, பர்ன்ஸ் 1, மேடின்சன் 14 ரன்னில் வெளியேறினர். பென் மெக்டெர்மாட் - கேப்டன் அலெக்ஸ் கேரி ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 117 ரன் சேர்த்தது. கேரி 58 ரன் எடுத்து விஹாரி பந்துவீச்சில் தியாகியிடம் பிடிபட்டார். இந்தியா லெவன் வீரர்கள் வெற்றி முனைப்புடன் தாக்குதலை தீவிரப்படுத்தினர். எனினும், மெக்டெர்மாட் - ஜாக் வைல்டர்மத் இணைந்து 5வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி ரன் சேர்க்க, இவர்களைப் பிரிக்க முடியாமல் இந்தியா லெவன் பவுலர்கள் திணறினர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர்.

ஆஸ்திரேலியா ஏ அணி 75 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 307 ரன் எடுத்த நிலையில், போட்டி டிராவில் முடிந்தது. மெக்டெர்மாட் 107 ரன் (167 பந்து, 16 பவுண்டரி), வைல்டர்மத் 111 ரன்னுடன் (119 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா லெவன் பந்துவீச்சில் ஷமி 2, சிராஜ், விஹாரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி (பகல்/இரவு) அடிலெய்டில் டிச. 17ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: