தேவையற்ற செலவை ஏற்படுத்தும் நிதியுதவி திட்டங்களை நிறுத்துகிறது மத்திய அரசு: ஜன.15க்குள் அறிக்கை அளிக்க அமைச்சகங்களுக்கு உத்தரவு

புதுடெல்லி: அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவை ஏற்படுத்தும் நிதியுதவி திட்டங்களை நிறுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மக்கள் நேரடியாக பயன்பெறக் கூடிய பல்வேறு நிதியுதவி திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் துறைகளின் மூலமாகவும் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன. பெரும்பாலான திட்டங்கள், மத்திய அரசு எதிர்பார்த்த பயன்களை அளிக்கவில்லை.

இந்நிலையில், மத்திய அரசுக்கு அதிக செலவினத்தையும், நிதிச்சுமையையும் ஏற்படுத்தக் கூடிய பல்வேறு நிதியுதவி திட்டங்களை அடுத்தாண்டு முதல் நிறுத்த, மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதுபோன்ற திட்டங்களை அடையாளம் கண்டு தெரிவிக்கும்படி, தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் சமீபத்தில் அது கடிதம் எழுதி இருக்கிறது. மத்திய நிதியமைச்சகம் எழுதியுள்ள இக்கடிதத்தில், ‘2021ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்குள் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்கள் மற்றும் மத்திய துறை பிரிவுகளின் திட்டங்கள் குறித்த மதிப்பீடு அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்.  

அதன் அடிப்படையில், குறிப்பிட்ட சில திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளன. அதனால், நேர்மையான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.’ என அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நிதியுதவி திட்டங்கள் மிகவும் பயன் அளிக்கக் கூடியதாக இருந்தாலும் கூட, அது நிறுத்தப்பட வேண்டியிருக்கும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அனைத்து துறைகளிடமும் இருந்து இந்த அறிக்கை கிடைத்ததும், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நிதியுதவி திட்டங்கள் நிறுத்தப்படப் போவது உறுதியாகி இருக்கிறது. 

Related Stories: