சிபிஎஸ்இ மற்றும் நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் மற்றும் நீட், ஜெஇஇ போட்டித் தேர்வுகள் வழக்கம் போல நடக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த தேர்வும் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.   

பள்ளித்தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று மாணவர்களுடன் டிவிட்டரில் கலந்துரையாடினார். 2021ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேர்வு, நீட் மற்றும் ஜெஇஇ மெயின் தேர்வுகள் தொடர்பான விளக்கங்களை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்துரையாடலில் பங்கேற்றனர். அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்குரமேஷ் பொக்ரியால், தனது டிவிட்டர் பக்கத்தில் சில விளக்கங்களும், புதிய அறிவிப்புகளையும் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: n சிபிஎஸ்இ தேர்வு 2021ம் ஆண்டில் வழக்கம்போல முன்கூட்டியே நடத்தப்படும். தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை. தற்போதுள்ள சூழ்நிலை குறித்து சிபிஎஸ்இ வாரியம் ஆய்வு செய்துவருகிறது. தேர்வு நடத்துவதற்கு ஏற்ற சூழல் எது என்று பார்த்து, அதற்கான தீர்வு மேற்கொள்ளப்படும்.

* 2021ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ, செய்முறைத் தேர்வுகளை பொறுத்தவரையில், 17 மாநிலங்களில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களுக்கான வருகைப் பதிவு குறைவாகவே இருக்கும். செய்முறைத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்படும் போது, சிபிஎஸ்இ வாரியம் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்யும். ஒருவேளை அந்தந்த பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடத்தினால், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்படும்.

* ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளை பொறுத்தவரையில், பாடத் திட்டத்தை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக போட்டித் தேர்வுகளில் சில பாடத்திட்ட பகுதிகள் குறைக்கப்படலாம். அதாவது, கொடுக்கப்பட்டுள்ள பாடத் திட்டத்தில் இருந்து குறைவான கேள்விகளை கேட்பது அல்லது சாய்ஸ் அளிப்பது போன்றவை குறைக்கப்படும். பாடத்திட்டத்தில் 10 முதல் 20 சதவீதம் குறைப்பது குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

*  2021ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தவிர்த்தார். 2020ல் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மேற்கண்ட தேர்வுகளை நடத்துவதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்த போது, இந்த ஆண்டை வீணாக்காமல் தேர்வை நடத்தலாம் என்று அரசும், உச்ச நீதிமன்றமும் எடுத்த முடிவுகளை மாணவர்கள் வரவேற்றனர். அதனால், தேர்வுகள் நடத்தப்படும்.

* ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளை பொறுத்தவரையில் அனைத்து ஏற்பாடுகளும் வழக்கம் போல செய்யப்படுகிறது. அதன்படி முன்னதாவே தேர்வுகள் நடக்கும் தேதி குறித்து மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். மேலும், செப்டம்பர் மாதம் நடக்கும் ஜெஇஇ தேர்வு, நவம்பர் மாதம் நடக்கும் நீட் தேர்வு ஆகியவை குறித்து தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

*  சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கமாக வெளியாகும். ஆனால் இதுவரை வெளியாகவில்லை. அதனால் சிபிஎஸ்இ தேர்வுகள் தள்ளிப் போகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், தள்ளிப்போவதற்கான வாய்ப்பு இல்லை என்று சிபிஎஸ்இயின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: