செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் செல்வதற்கான ஸ்பேஸ்எக்சின் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறல்

வாஷிங்டன்: எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்ட ராக்கெட்டான ‘ஸ்டார்ஷிப்’ வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு கீழே விழுந்து வெடித்து  சிதறியது.

விண்வெளி துறையில் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. இதன் தலைவர் எலன் மஸ்க். விண்வெளியில் நிரந்தரமாக ஆராய்ச்சிகளை செய்து வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு  மையத்துக்கும் இந்நிறுவனத்தின் விண்கலம், வீரர்களை அனுப்பி வருகிறது. எதிர்காலத்தில் விண்வெளி சுற்றுலா பயணத்தை நடத்தும் திட்டத்தில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்துக்காக, இந்த நிறுவனம் ‘ஸ்டார்ஷிப்’ என்ற பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது. இதற்காக முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி  ராக்கெட் 60 அடி உயரம் கொண்டது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் இருந்து, நேற்று இந்த ராக்கெட் ஏவப்பட்டது. தீப்பிழப்புகளை கக்கியவாறு வானில் சீறிப் பாய்ந்த இந்த ராக்கெட், 8 கிமீ உயரம்  வரை சென்றது. ஆனால், திரும்பி வரும் போது எரிகலன் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதில் மூன்று இன்ஜின்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ஒன்றன் பின் ஒன்றாக பிரிய வேண்டிய இந்த இன்ஜின்கள் முற்றிலும் செயல் இழந்தன.  இதனால், ராக்கெட் நிலத்தில் மோதி பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால், ஸ்டார்ஷிப் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: