கொரோனாவால் தெ.ஆ.வில் இருந்து எஸ்கேப்; இலங்கையை தாக்க இங்கிலாந்து புயல் ரெடி!

லண்டன் :  தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் கொரோனா காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில்  விளையாட உள்ளது.பின்னர் வரும் பிப்ரவரியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்களில் பங்கேற்கவுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி டி20 தொடரை கைகொண்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒருநாள் தொடரில்  விளையாடாமல் தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளது.

கொரோனா பாதிப்பையடுத்து தொடரை தள்ளி வைப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு நாட்டு போர்டுகளும் கூட்டாக அறிவித்தன. இதையடுத்து ஒருநாள் தொடரின் ஒரு  போட்டியில் கூட விளையாடாமல் இங்கிலாந்து அணியினர் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இங்கிலாந்து அணி, வரும் ஜனவரி 14ம் தேதி துவங்கி 18ம் தேதி வரையிலும் 22ம் தேதி துவங்கி 26ம் தேதி வரையிலும் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் மோதவுள்ளது.

 இந்த தொடர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சேர்க்கப்பட உள்ளன. இதையடுத்து இந்தியாவில் வரும் பிப்ரவரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியினர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோதவுள்ளனர்.  இதற்கென வரும் 24ம் தேதி பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாகவும் அதையடுத்து இந்த தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: