பி.எம் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற வெளிமாநிலங்களை சேர்ந்த 450 பேரின் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம்: வசூலித்து தரக்கோரி வங்கிகளுக்கு மின் அஞ்சல்

ராணிப்பேட்டை: பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.6 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கென விவசாயிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் பெறப்பட்டு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தமிழகத்தில் கிசான் திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிஎம் கிசான் திட்டத்தில் முறைகேடாக இணைந்து பணம் பெற்றவர்களிடமிருந்து பணத்தை உடனடியாக வசூலிக்க வேண்டும், என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பணம் வசூலிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். அதில் ரூ.1.34 கோடி அரசுப்பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் வெளிமாநிலங்களை சேர்ந்த 450 பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.10 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் வசூலித்து தர 4 மாநிலங்களில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவின்பேரில் பி.எம் கிசான் திட்டத்தில் இணைந்து முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து இதுவரை ரூ.1.34 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 450 பேரின் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் உள்ளது. அதனை திரும்ப வசூலித்துதர அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முழு தொகையும் வசூலிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும்’ என்றனர்.

Related Stories: