டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி முன்வைத்த குற்றசாட்டை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் எங்கும் செல்லலாம் என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லி, ஹரியானா எல்லை பகுதியான சிங்குவில் போராடி வரும் விவசாயிகளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியது. நேற்று விவசாயிகளை சந்தித்து திரும்பிய பிறகே டெல்லி முதல்வர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, வீட்டில் இருந்து யாரும் வெளியேறவோ, யாரும் வீட்டிற்குள் செல்லவோ அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறியது.
