ஜம்மு திருமண விழாவில் துப்பாக்கிச்சூடு கடவுள் தான் என்னை காப்பாற்றினார்: பரூக் அப்துல்லா பேட்டி

 

ஜம்மு,: ஜம்முவில் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிர் தப்பிய பரூக் அப்துல்லா, கடவுள் தான் என்னை காப்பாற்றினார் என்று கூறியுள்ளார். தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பி.எஸ்.சவுகானின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜம்முவில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா(88) மற்றும் துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், திருமண மண்டபத்தில் இருந்து வெளியே நடந்து வந்தனர். அப்போது, திடீரென ஒருவர், துப்பாக்கியால், பரூக் அப்துல்லா மீது சுட முயன்றார். இதை பார்த்ததும் பாதுகாப்பு படை வீரர் அந்த நபரை கீழே தள்ளி துப்பாக்கியை பறிமுதல் செய்ய முயன்றனர். அந்த நேரத்தில், அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அப்துல்லா மயிரிழையில் தப்பினார். துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர், ஜம்முவை சேர்ந்த கமல் சிங் ஜாம்வால் (70) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருமண மண்டபம் அருகே காத்திருந்து, பரூக் அப்துல்லா மற்றும் துணை முதல்வர் சவுத்ரி வெளியே வரும் நேரத்தில் துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாக பரூக் அப்துல்லாவை கொல்ல திட்டமிட்டு வந்ததாகவும் இன்று தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட கமல் சிங்கை நேற்று நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பரூக் அப்துல்லா மீது நடந்த கொலை முயற்சிக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிசூடு பற்றி பரூக் அப்துல்லா நேற்று கூறுகையில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். கடவுள் என்னை காப்பாற்றி விட்டார் ’ என்றார்.

Related Stories: