செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்: அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் தவிப்பதாக குமுறல்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி எழில்முக நகர், ஜவகர் நகர், காந்தி நகர் மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தற்போது, மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கடந்த 5 நாட்களுக்கு மேல் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், வீடுகளில் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மருந்து பொருட்கள், காய்கறி மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்ககூட வெளியே செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

எனவே, குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை கண்டித்து, பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் நேற்று மதியம் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், செம்மஞ்சேரி குமரன் நகரில் இருந்து நூக்கம்பாளையம் வழியாக சுனாமி குடியிருப்பு வரை உள்ள சாலையில் வடிகால் அமைக்க வேண்டும்,

எழில்முக நகர், ஜவகர் நகரில் இருந்து ராஜீவ்காந்தி சாலை வரை ஐந்தடி சாலை அமைக்க வேண்டும், சுனாமி குடியிருப்பு வழியாக செல்லும் தற்காலிக கால்வாயை அகலப்படுத்தி நிரந்தரமாக கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும், தாழம்பூர் முதல் ராஜீவ்காந்தி சாலை காந்தி நகர் வரை ஐந்தடி சாலை அமைக்க வேண்டும், செம்மஞ்சேரி வால்வெட்டி ஏரி, சோழிங்கநல்லூர் ரெட்டை குட்டை தாங்கல் ஏரி நீர்வழி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், ‘‘வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதுவரை எந்த அதிகாரியும், இதைஅகற்ற நடவடிக்கைஎடுக்கவில்லை. நீர் வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: