ஆக்ராவில் பிரதமர் மோடி பேச்சு: கடந்தகால சட்டங்கள் இப்போது சுமையாகி உள்ளன: வளர்ச்சி காண மறுசீரமைப்பு அவசியம் என வலியுறுத்தல்

லக்னோ: மத்திய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ‘சில கடந்தகால சட்டங்கள் இப்போது சுமையாகி உள்ளன. வளர்ச்சி காண மறுசீரமைப்பு அவசியம்’ என ஆக்ராவில் பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார். ஆக்ராவில் சுற்றுலாதலங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நேற்று காணொலி வாயிலாகத் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது:நாடு வளர்ச்சியடைய மறுசீரமைப்புப் பணிகள் அவசியம் வேண்டும். கடந்த காலத்தில் நல்லதாக இருந்த சில சட்டங்கள், இப்போது சுமையாகி மாறி உள்ளன. இதனால்தான் பாஜ அரசு மறுசீரமைப்புகளையும், மாற்றங்களையும் உறுதியாக நம்புகிறது. இதற்காகவே பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். முந்தைய ஆட்சிகளில் மறுசீரமைப்புகள் துண்டு துண்டாக ஒரு சில விஷயங்களில் மட்டுமே செய்யப்பட்டன. தற்போதைய அரசு முழுமையான சீரமைப்பு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

சிலரது தவறான நோக்கத்தால் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையே பாதிப்புக்கு உள்ளானது. அத்துறையை மீட்க கொண்டு வரப்பட்டது தான் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம். பில்டர்களுக்கும், வீடு வாங்குவோருக்கும் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு நடுத்தர ரக வீடுகள் மிக விரைவாக கட்டி முடிக்கப்பட்டு வருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மக்கள் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் வரும் தேவையற்ற சிக்கல்களைத் தீர்த்து வைக்க அரசு பல புதிய திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான முதலீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிக்காக அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது என பிரதமர் மோடி சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவித்தார். ஆக்ரா நிகழ்ச்சியிலும் அவர் பேசுகையில், ‘‘கொரோனா தடுப்பூசிக்காக அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்காக அலட்சியமாக இருந்து விடக் கூடாது. சமூக இடைவெளி உள்ளிட்ட வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.

8,300 கோடி மதிப்பு திட்டம்

* ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மகால், ஆக்ரா கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பஸ் மற்றும் ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

* இதற்காக 29.4 கிமீ தூர ரயில் பாதை அமைக்க 8,379.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* 5 ஆண்டுகள் பணிகள் நிறைவடையும்.

* வருடந்தோறும் வருகை தரும் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கும் இத்திட்டம் பெரிதும் பயன்படும்.

Related Stories: