138 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வெ.இண்டீஸ் போராட்டம்

ஹாமில்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. செடான் பார்க் மைதானத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீசிய நிலையில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய கேப்டன் கேன்  வில்லியம்சன் 251 ரன் விளாசி அசத்தினார். லாதம் 86, டெய்லர் 38, ஜேமிசன் 51* ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோச், கேப்ரியல் தலா 3, ஜோசப் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்திருந்தது.

நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (64 ஓவர்). பிராத்வெய்ட் 21, கேம்ப்பெல் 26, பிளாக்வுட் 23, கேப்டன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 4, ஜேமிசன், வேக்னர் தலா 2, போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். 381 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்துள்ளது. அந்த அணி 21.3 ஓவரில் 89 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ஜெர்மைன் பிளாக்வுட் - அல்ஜாரி ஜோசப் ஜோடி கடுமையாகப் போராடி ரன் சேர்த்து வருகிறது. பிளாக்வுட் 80 ரன், ஜோசப் 59 ரன்னுடன் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் கை வசம் 4 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 185 ரன் தேவை என்ற நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

Related Stories: