புதுகை மாவட்டத்தில் 5 குளங்கள் மட்டுமே நிரம்பி உள்ளது-3 நாட்களாக தொடர் மழை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழைக்கு 5 குளங்கள் மட்டுமே நிரம்பி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புரெவி புயலால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றும் ஆங்காங்கே சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்து வந்ததால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குளிர் சூழலே நிலவியது.

மழையால் பாதிக்கப்படும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 31 மையங்கள் அமைக்கப்பட்டு 1500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இம்மையங்களில் செய்து தரப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 118 வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கு அந்தந்த பகுதி வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று நிவாரண தொகை மற்றும் உதவிகளை வழங்குவார்கள்.

மேலும், மழையால் இருவர் சிறிய காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளது.மேலும், மாவட்டத்தில் மொத்தம் 961 குளங்கள் உள்ளன. இவற்றில் அண்மைக்காலமாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக வெறும் 5 குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 50 சதவிகிதத்துக்கும் மேல் 137 குளங்களும், 50 சதவிகிதத்துக்குள் 477 குளங்களும், 25 சதவிகிதத்துக்குள் 320 குளங்களும் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மழை அளவு மி.மீ. வருமாறு: ஆதனக்கோட்டை-51.60, பெருங்களூர்- 76.20, புதுக்கோட்டை நகரம்- 47.50, ஆலங்குடி-116.80, கந்தர்வகோட்டை-88, கறம்பக்குடி-174.80, மழையூர்- 175, கீழாநிலை-64.80, திருமயம்-67, அரிமளம்-61.20, அறந்தாங்கி-49.80, ஆயிங்குடி- 153.20, நாகுடி- 63.20, மிமீசல்-41.50, ஆவுடையார்கோயில்-36.50, மணமேல்குடி- 80.10, இலுப்பூர்- 62, குடுமியான்மலை-57, அன்னவாசல்-79, விராலிமலை-62.20, உடையாளிப்பட்டி- 85.40, கீரனூர்- 83.50, பொன்னமராவதி- 42.80, காரையூர்- 42.80. பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழை 77.56 மிமீ ஆகும்.

Related Stories: