விதிகளை மீறி ‘பிரமிட்’ முன் ஆபாச ‘ஷுட்டிங்’ : டிக்-டாக்கில் வெளியிட்ட மாடல் அழகி கைது

கெய்ரோ, :எகிப்து தொல்பொருள் துறையின் பிரமிட் முன்பாக ஆபாச ‘ஷுட்டிங்’ எடுத்து டிக்-டாக்கில் வெளியிட்ட மாடல் அழகி மற்றும் வீடியோ கிராபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எகிப்திய தலைநகர் கெய்ரோவிலிருந்து 30 கிலோமீட்டர் தெற்கே உள்ள நெக்ரோபோலிசஸ் என்ற இடத்தில் தொல்பொருள் துறையை சேர்ந்த  பிரமிடுகள் உள்ளன. அங்கு, அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், எகிப்திய மாடல் அழகி சல்மா அல்-ஷிமி என்பவர், தனது வீடியோகிராபர் மூலம் டிக்-டாக் வீடியோ ஒன்றை எடுத்தார். இந்த வீடியோவை கடந்த வாரம் அல்-ஷிமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது உலகெங்கிலும் வைரலாகி வருகிறது. அதிர்ச்சியடைந்த எகிப்திய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.

பின்னர் அவர் மீது எகிப்திய பாரம்பரிய முறையில் இருந்து வேறுபட்ட ஆபாச ஆடைகளை அணிந்ததற்காகவும், குறிப்பிட்ட பிரமிட் பகுதியில் போட்டோ ஷூட்டுக்காகவும், தொல்பொருள் துறை அமைச்சகம் வகுத்த விதிகளை மீறியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது வீடியோகிராபர் ஹவுசம் முகம்மது என்பரையும் கைது செய்தனர். பின்னர், 500 எகிப்திய பவுண்டுகள் அபராதம் செலுத்திய பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மாடல் ஷிமி மற்றும் வீடியோகிராபரை கைது செய்ததற்கு சமூக ஊடகங்களில் சில நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் அதிகாரிகளின் நடவடிக்கையை ஆதரித்துள்ளனர்.

Related Stories:

>