எஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா: கர்நாடக தமிழ்பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம் தகவல்

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாம் ஆண்டு பியூசி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி ரொக்கப்பரிசு அளிக்க கர்நாடக தமிழ்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை கர்நாடக தமிழ்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் அ.தனஞ்செயன் தலைமையில் நடந்தது. இதில், சங்க ஆலோசகர் புலவர் கார்த்தியாயினி, துணைத்தலைவர் ஆர்.பிரபாகரன், செயலாளர் மெர்லின், பொருளாளர் ஆசீர்வாதம், டி.ஜோதி, டி.சுப்பாராஜ், கே.பீனா, எஸ்.சுசீதா, விசாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அ.தனஞ்செயன் கூறியதாவது: 2020-21-ஆம் கல்வியாண்டில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி மற்றும் இரண்டாமாண்டு பியூசி தேர்வில் தமிழ் பயிற்று மொழி மற்றும் முதல் மொழி தமிழ்பாடத்தில் 10 இடங்களை பிடித்துள்ள 30 மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி ரொக்கப்பரிசு அளிக்கப்படும். முதல் இடத்துக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் இடத்துக்கு ₹3 ஆயிரம், மூன்றாம் இடத்துக்கு ரூ.2 ஆயிரம், ஆறுதல் பரிசாக ரூ.1 ஆயிரம் அளிக்கப்படும். பெங்களூரில் ஜன.9-ஆம் தேதி நடக்கவிருக்கும் சங்க ஆண்டு விழா, பொங்கல் விழா, மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசளிக்கப்படும்.

விழாவில் சங்கத்தின் ஆண்டு மலர் வெளியிடப்படும். சங்கத்தின் உறுப்பினர்களுக்காக 2021-ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி தயாரிக்கப்படும். தமிழாசிரியர்களுக்கு பயிலரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். பெங்களூரு மட்டுமல்லாது கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் செந்தமிழ் வகுப்புகள் தொடங்கப்பட்டு, தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரப்படும். நலிவடைந்த நிலையில் இருக்கும் அரசு தமிழ்பள்ளிகளை தத்தெடுக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பெங்களூரு, திம்மையா சாலையில் உள்ள அரசு தமிழ் ஆரம்பப் பள்ளி, சாமராஜ்நகர் மாவட்டம் நெல்லூரில் உள்ள அரசு தமிழ் ஆரம்பப்பள்ளியை தத்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: