புறக்கணிக்கப்படும் பி.ஜி.எம்.எல். குடியிருப்பு பகுதி வார்டுகள்: அடிப்படை வசதிகளை ஏற்படுத்த இந்திய கம்யூனிஸ்டு மனு

தங்கவயல்: தங்கவயல் நகரசபையின் பி.ஜி.எம்.எல். தொழிலாளர் குடியிருப்பு பகுதி வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இதனால் அந்த வார்டுகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமியிடம் நகர பொது செயலாளர் வழக்கறிஞர் ஜோதி பாசு கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில்,1997ஆம் ஆண்டு பி.ஜி.எம்.எல். தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் நகரசபையுடன் இணைக்கப்பட்டது. அந்த பகுதியில் 18 வார்டுகள் உருவாக்கப்பட்டு அங்கிருந்து கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வார்டுகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டிய நகர சபையால் தொழிலாளர் பகுதி வார்டுகள் புறக்கணிக்கப்படுவதால், இந்த பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லை. சீரான சாலை வசதிகள் இல்லை.

ஒவ்வொரு வார்டிலும் கட்டி முடிக்கப்பட்ட பொது கழிவறைகள் கடந்த ஐந்து வருடங்களாக திறக்க படாமல் பூட்டி கிடக்கிறது. குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் புதர் மண்டி கிடக்கிறது. துப்புரவு பணி இன்றி சுத்தம் சுகாதாரம் சீர் கெட்டு கிடக்கிறது. ஏழை தாழ்த்தப்பட்ட இன மக்களுக்காக கோடிக்கணக்கான செலவில் கட்டப்பட்ட அம்பேத்கர் பவன் வழக்கில் சிக்கி கிடக்கிறது. நகரசபை சார்பில் சட்டரீதியில் தகுந்த நடவடிக்கை எடுத்து பிரச்னையை தீர்த்து பொது மக்கள் பயன் பாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், மாரிகுப்பம் 9 வது செல்லப்பா வார்டில் அம்பேத்கர் திருமண மண்டபம் உள்ளது. அதை அடுத்து காலி நிலம் உள்ளது.

அங்கு பூங்கா அமைத்து தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கவயல் தொகுதி எம்எல்ஏக்கள் கே.எஸ்.வாசன், ராஜகோபால், சி.எம்.ஆறுமுகம், டி.எஸ்.மணி, மு.பக்தவச்சலம், ஆகிய தலைவர்களின் உருவ பலகைகளை திறந்து வைத்து இளைஞர்கள் அறிந்து கொள்ள வழி செய்ய வேண்டும். ஆண்டர்சன்பேட்டை பஸ் நிலைய சதுக்கத்திற்கு கே.எஸ்.வாசன் பெயர் சூட்ட வேண்டும். இந்த கோரிக்கைகள் தீர்க்க பட வில்லை என்றால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று கூறி இருந்தார். மனுவை பெற்று கொண்ட நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி வரும் 4ம் தேதி நகரசபையின் முதல் கவுன்சில் கூட்டம் நடக்க உள்ளது. அதில் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானம் நிறைவேற்றி இரண்டு மாத கால அவகாசத்தில் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.

Related Stories: