வேளாண் சட்டங்கள் நல்ல பலன் கொடுக்கும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மத்திய அமைச்சர் டி.வி.சதானந்தகவுடா வேண்டுகோள்

பெங்களூரு: பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி சட்டங்கள் எப்படி மக்களுக்கு பலன் கொடுத்து வருகிறதோ, அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களும் பலன் கொடுக்கும் என்பதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்தகவுடா வேண்டுகோள் விடுத்தார். பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:, ‘‘நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகள் பழக்கத்தில் இருப்பதை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதேபோல் தேசியளவில் ஒரே சீரான வரிக்கொள்கை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி அறிமுகம் செய்த இரு திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளை நாடாளுமன்றத்தில் மட்டுமில்லாமல் வெளியிலும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இரு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பான சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தபோது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு ஆதரவு தெரிவித்தனர். இது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கிடைத்த பெருமையாகும். கடந்த நான்காண்டுகளில் மேற்கண்ட இரு சட்டங்கள் நடைமுறையில் இருப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடைந்து வருகிறது. பண மதிப்பிழப்பு சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் எப்படி பலன் கொடுத்து வருகிறதோ, அதேபோல் விவசாயிகளின் நலனுக்காக தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களும் நல்ல பலன் கொடுக்கும்.

விவசாயிகள் இதை புரிந்துகொண்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்தை கைவிட வேண்டும். புதிய சட்டங்களால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது விரைவில் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படும். மேலும் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழு மில்லியன் உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வரும் மூன்றாண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து யூரியா இறக்குமதி செய்வதை முற்றிலும் நிறுத்திவிட்டு. உள்நாட்டில் தயாரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். விவசாயிகள் பயன்படுத்தும் உரம் உற்பத்தி செய்வதில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது என்றார். மூன்றாண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து யூரியா இறக்குமதி செய்வதை முற்றிலும் நிறுத்திவிட்டு.உள்நாட்டில் தயாரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

Related Stories: