தங்கவயலில் ஒட்டு போட்ட சாலையை அடித்து சென்ற கனமழை: வாகன ஓட்டிகள் அவதி

தங்கவயல்: தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை-ஆண்டர்சன் பேட்டை சாலையில் உள்ள குழிகளுக்கு கடந்த ஒரு  மாதத்திற்கு முன் ஜல்லி, மணல் நிரப்பி  தற்காலிகமாக ஒட்டு போடப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் அரித்து சென்றதால் சாலை சேதமடைந்துள்ளது. தங்கவயலில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அத்துடன் தொடர் மழை  காரணமாக சாலைகளின் நடுவில்  குண்டும், குழியுமாக மாறி அதில் மழை நீர் தேங்கி  போக்குவரத்துக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. சாலைகள் புனரமைக்கப்படும் போதே, சாலையோர கால்வாய்கள் அமைத்து மழை நீர் வடிந்து செல்லும் வகையில் இருந்தால், மழை நீர் அரிப்பு  ஏற்பட்டு சாலைகளில் பள்ளம் உருவாகாமல் தவிர்க்க முடியும். ஆனால்‌ சாலையோர மழை நீர் வடி கால்வாய்கள் இல்லாததாலேயே பெரும்பாலும்  சாலைகள் சேதமடைகின்றன.

தற்போது தங்கவயலின் முக்கிய சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. போக்குவரத்துக்கு பெரும் சவாலாக உள்ள சாலை குழிகளை சீரமைத்து  புனரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ராபர்டசன்பேட்டையில் இருந்து ஆண்டர்சன்பேட்டை  செல்லும் முக்கிய சாலையில் சுமதி ஜெயின் உயர் நிலைப்பள்ளி மற்றும் மோரியா ஆதரவற்றோர் விடுதி ஆகியவற்றின் எதிரே மிக மோசமாக  குழிகள் ஏற்பட்டு அதில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

 ஒரு மாதம் முன்பு ஜே.சி.பி.இயந்திரத்துடன் வந்த பொதுப்பணி துறை ஊழியர்கள், சாலை குழிகளில் ஜல்லி மணல் கொட்டி நிரப்பி சமன் செய்தனர். மீண்டும் மழை பெய்ததும், ஜல்லி மணல் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சாலை குழிகளில் மழை நீர் தேங்கும், எனவே மழை நீர் வடிகால்  கால்வாயுடன் சாலைகளை புனரமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிட்டும்  என்பதே பொதுமக்களின் கருத்தாக இருந்தது. அதேபோல், கடந்த வாரம்  பெய்த தொடர் மழையில் ஜல்லிகள்அரித்து சென்றதால் மீண்டும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

Related Stories: