கார் மோதி பெண் பலி பல் டாக்டர் சிக்கினார்

புதுடெல்லி: விபத்தில் பெண் மீது காரை மோதி நிற்காமல் தப்பித்துச் சென்ற பல் டாக்டரை 2 வாரத்துக்குப் பின் போலீசார் அதிரடியாக கைது  செய்தனர்.தெற்கு டெல்லி லடோ சராயில் நவம்பர் 17ம் தேதி இரவு 38 வயது பெண் சாலையை குறுக்கே கடந்தார். அப்போது தறிகெட்ட வேகத்தில் வந்த கார்  அந்த பெண் மீது மோதியது. பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பெண் சரிந்ததைக் கண்டும், காணாதது போல நிற்காமலே கார் விரைந்து சென்று  மாயமானது.தகவல் கிடைத்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார், பெண்ணை எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துள்ளார் என  எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, தறிகெட்ட வேகத்தில் தாறுமாறாக வாகனம் ஓட்டியது, விபத்து ஏற்படுத்து பலி உண்டாக்கியது போன்ற ஐபிசி குற்றப்பிரிவுகளில்  எப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரிக்கத் தொடங்கினர்.

அதில் இறந்த பெண், குருகிராமில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணி புரிந்தவர் என்றும், லடோ சராயில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி  இருந்தவர் என்றும் தெரிந்தது. மேலும், விபத்து பகுதி சிசிடிவி கண்காணிப்பு கேமரா அனைத்தையும் தீவிரமாக ஆய்வு செய்த போலீசார், குறிப்பிட்ட  ஒரு சொகுசு கார் தான் விபத்து ஏற்படுத்தியது என உறுதி செய்தனர். அதையடுத்து அந்த கார் பதிவெண்ணைக் கொண்டு, போக்குவரத்து அலுவலகத்தில் முகவரியை பெற்று, சாகெட்டில் கிளினிக் வைத்துள்ள கல்காஜி  விரிவாக்கத்தில் வசிக்கும் பங்கஜ் சுதாகர்(42) எனும் பல் டாக்டரை கைது செய்தனர்.விபத்து ஏற்படுத்தியதை சுதாகர் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

Related Stories: