ஜோ பிடெனுக்கு காலில் எலும்பு முறிவு: செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடிய போது விபத்து

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிடெனுக்கு காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தனது வளர்ப்பு நாயுடன் விளையாடியபோது கால் இடறிக் கீழே விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிடென் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வெள்ளை மாளிகைக்கு குடியேறும் போது தனது செல்லப் பிராணிகளான மேஜர், சாம்ப் என 2 நாய்களையும் பிடென் அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், 2 வயதான மேஜர் என்கிற ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் சனிக்கிழமையன்று பிடென் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறியதில் கீழே விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு எலும்பியல் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் எலும்பு ஆரோக்கியமாக இருப்பதாகவே தெரிந்தது. எனினும் வலது காலின் நடுப்பகுதியில் வலி இருப்பதாக பிடென் கூறினார். இதனால் நேற்று பிற்பகலில் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிடி ஸ்கேன் பரிசோதனையில் வலது காலின் நடுப்பகுதியில் லேசாக எலும்பு உடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சில வாரங்களுக்கு நடக்கும்போது வாக்கிங் பூட்டினை உதவிக்காகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், ஓய்வு எடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பிடெனின் மருத்துவர் கெவின் ஓ கான்னர் கூறுகையில், ‘‘பிடென் முழு ஆரோக்கியத்துடன் உள்ளார். சுறுசுறுப்பாக இருக்கிறார். மது, புகைப்பழக்கம் அவருக்குக் கிடையாது. வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சில வாரங்கள் ஓய்வுக்குப் பிறகு குணமாகிவிடுவார்’’ என்று கூறியுள்ளார்.பிடென் விரைவில் குணமடைய நடப்பு அதிபர் டிரம்ப் வாழ்த்து கூறியிருக்கிறார். டிரம்புக்கு வளர்ப்புப்பிராணிகள் எதுவும் இல்லை. வெள்ளை மாளிகையின் கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் செல்லப்பிராணிகள் இல்லாத அதிபர் என்ற பெயரும் டிரம்ப்புக்கு உண்டு.

விஸ்கான்சினிலும் வெற்றி உறுதி

விஸ்கான்சின் மாகாணத்தில் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று டிரம்ப் தரப்பு கோரிக்கை வைத்திருந்தது. இதனால் நேற்று மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 20,600 வாக்கு வித்தியாசத்தில் பிடென் வெற்றி பெற்றது உறுதியானது. ஏற்கெனவே அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவெடா மற்றும் பென்சில்வேனியாவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையிலும் பிடென் வெற்றி உறுதியானது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொடர்புக்கு எல்லாமே பெண்கள்

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்புக்கான செய்தித்தொடர்பாளர்களாக முழுக்க முழுக்க பெண்களையே பிடென் நியமித்துள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் குழுவின் செயலராக ஜென் ப்சாகி, தகவல் தொடர்பு இயக்குநராக கேட் பெடிங்பீல்ட், துணை செயலராக கரீன் ஜீன் பியெரே, மூத்த ஆலோசகராக சைமோன் சாண்டர்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எலிசபெத் அலெக்ஸாண்டர் பிடெனின் மனைவிக்கு தகவல் தொடர்பு இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: