மன அழுத்தத்தில் இந்தியர்களுக்கு முதலிடம் மனநல மருத்துவமனைகளை ஏன் மாவட்டந்தோறும் துவக்க கூடாது? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: சிறைகளில் மனநல சிகிச்சை குழுவை அமைக்க கோரி, மதுரை, சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: உலகிலேயே அதிக மன அழுத்தம் உள்ளவர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. நம் நாட்டில் 7.5 சதவீதம் பேர் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு உள்ளது. தற்கொலை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு அடிப்படையாக மன அழுத்தம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மனஅழுத்தம் சார்ந்த பாதிப்புகள் இருமடங்காகியுள்ளது. 150 மில்லியன் இந்தியர்கள் மனம் சார்ந்த நோய் பாதிப்புக்கும், 13 முதல் 17 வயதுள்ள பருவ வயதினர் 9.8 மில்லியன் பேர் மன அழுத்தம் மற்றும் மனநிலை சார்ந்த பிரச்னைகளுக்கும் ஆளாகியுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

7 பேரில் ஒருவர் மனநலன் சார்ந்த பிரச்னையில் உள்ளார் என்பது உண்மையா? பாதிக்கப்பட்டோர் குறித்து மத்திய, மாநில அரசுகள் கள ஆய்வு மேற்கொண்டுள்ளதா? இந்தியர்கள் அதிகமானோர் பாதிக்கும் பிரச்னை எது? மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் மனநல மருத்துவமனைகளை ஏன் துவங்கவில்லை. உளவியல் மற்றும் மனநல பிரச்னைகள் தொடர்பான உயர்கல்வி நிறுவனங்களை ஏன் அதிகரிக்கக்கூடாது? மனநலம் மற்றும் உளவியல் டாக்டர்கள், பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் எத்தனை பேர் உள்ளனர்? மாவட்டந்தோறும், தாலுகா அளவிலும் மனநல மருத்துவரை ஏன் நியமிக்கக்கூடாது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலர்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை டிச.9க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: