காவேரிப்பாக்கம் கொள்முதல் நிலையத்தில் 4,500 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை  மாவட்டம் ஓச்சேரி அடுத்த சங்கரம்பாடி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.  இங்கு  களத்தூர், சித்தஞ்சி, பெரும்புலிப்பாக்கம் மற்றும் சங்கரம்பாடி, கிளார், பெரும்பாக்கம், முசரவாக்கம்  உள்ளிட்ட 20க்கும்  மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நெல்மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு 4 மாதத்திற்கு ஒருமுறை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட  நெல் கொள்முதல் கடந்த 23ம் தேதியுடன்  முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அறுவடை செய்துள்ள சுமார் 43 விவசாயிகள் கொண்டு வந்த நெல்மூட்டைகளை, ‘கொள்முதல் காலம் முடிந்து விட்டது’ எனக்கூறி நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், கொள்முதல் நிலையம் எதிரே வெட்டவெளியில் எவ்வித பாதுகாப்பும் இன்றி சுமார் 4500 நெல்மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். மேலும் நெல்லை குவியலாக கொட்டி வைத்துள்ளனர். ராணிப்பேட்டை கலெக்டரிடம் புகார் செய்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால், அங்கிருந்த 4500 நெல் மூட்டைகளும் மழையில் நனைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கொரோனா காலத்தில் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில், நெல்லை வாங்க அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் மறுத்துள்ளதால்  மழையில் நனைந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே உடனடியாக நெல் கொள்முதல் செய்ய கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Related Stories: