மதுராந்தகம் ஏரி நிரம்பியது; கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி நிரம்பிவிட்டதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அத்துடன் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 2,400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரியின் கரை சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.  ஏரியின் மொத்த கொள்ளளவு 694 மில்லியன் கன அடி. மதுராந்தகம் ஏரிக்கு தற்போது 22.3 அடி தண்ணீர் வந்துள்ளது. மேலும் தண்ணீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏரி முழுமையாக நிரம்பிவிட்டது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மதுராந்தகம் ஏரி முழுவதும் நிரம்பி தண்ணீர் திறக்கும் பட்சத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஏரியில் இருந்து 5 மதகுகள் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீர் மதுராந்தகம், அருங்குணம், காவாதூர், தேவாதூர் மற்றும் முள்ளி வளர்பிறை உள்ளிட்டகிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். முழுவதுமாக நிரம்பும் பட்சத்தில் 3 போகம் விவசாயம் செய்ய முடியும்.

இதனிடையே ஏரியின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் கிளியாற்றின் வழியாக வெளியேற்றப் படுவதால் கரையோரம் உள்ள கத்திரிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை மற்றும் வீராணகுண்ணம், தச்சூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் மதுராந்தகம் வருவாய்த்துறையினர் தண்டோரா மற்றும் ஒலி எழுப்பி மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ‘’ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது மற்றும் ஆற்றை கடப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் யாரும் ஈடுபட வேண்டாம். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: