வேளாண் துறை சார்பில் பொட்டாஷ் பாக்டீரியா திரவ உயிர் உரம் அறிமுகம்: வேளாண் விரிவாக்க மையங்களில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் வேளாண் உதவி இயக்குனர் கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜெயங்கொண்டம் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் 2020- 21ம் ஆண்டு முதல் புதிய பொட்டாஷ் பாக்டீரியா திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான முதன்மை சத்துக்களில் சாம்பல் சத்து (பொட்டாசியம்) இன்றியமையாதது. நமது மண்ணில் சாம்பல் சத்து அதிகளவில் தான் உள்ளது. ஆனால் மண்ணில் 2 சதம் சாம்பல் சத்து மட்டுமே பயிர்களுக்கு பரிமாற்றம் செய்யத்தக்க வகையில் உள்ளது. ஆகையால் மண்ணில் கட்டுண்டு கிடக்கும் சாம்பல் சத்தை மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பல்வேறு செயல் திறன்களால் அமிலத்தை உற்பத்தி செய்து நீரில் கரையும் சாம்பல் சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது.

எனவே இந்த திரவ உற்பத்தி மையத்தில் பிரட்டுரியா ஆரண்டியா (பொட்டாஷ் பாக்டீரியா) எனப்படும் நுண்ணுயிரியை 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொதிகலன்களில் வளர்த்து பாக்டீரியா செல்களை மட்டும் திரவ ஊடகத்திலிருந்து நவீன தொழில்நுட்பம் கொண்டு தனியே பிரித்தெடுத்து பின் நுண்ணுயிரி செல்களை ஒரு ஆண்டு வரை வாழ்நாள் திறன் குறையாமல் வைக்கும் ஒரு சிறப்பு ஊடகத்தில் மீண்டும் கலந்து பிளாஸ்டிக் கலன்களில் நிரப்பி அட்டை பெட்டியில் அடைத்து விநியோகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பொட்டாஷ் பாக்டீரியா மண்ணின் வெப்பநிலை 15 செல்சியசில் இருந்து 42 செல்சியஸ் வரை நன்கு வளரக்கூடியது. இது குறைந்தபட்ச அமில காரத்தன்மை (3.5) உள்ள மண்ணிலும் அதிகபட்ச அமில காரத்தன்மை 11.0 வரையிலும் உள்ள மண்ணிலும் தாங்கி வளரக்கூடியது. இந்த நுண்ணுயிரியானது மண்ணில் அதிகளவு உப்பு இருந்தாலும் அதிக உவர்தன்மை இருந்தாலும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது.

இந்த நுண்ணுயிரி பாக்டீரியா மற்றும் பூஞ்சாணங்களால் உண்டாகும் நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாத்து பயிரின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. இதனால் மகசூல் 10-25 சதவீதம் அதிகரிக்கிறது. இந்த நுண்ணுயிரி ஒரு மில்லி லிட்டருக்கு 108 செல் கூட்டமைப்பு உருவாக்கும் அலகு கொண்ட உயிர் உரம். இந்த பொட்டாஷ் பாக்டீரியா திரவ வடிவில் (500 மி.லி) அனைத்து வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் கிடைக்கிறது. இந்த மையத்தில் தயாரிக்கப்படும் அம்மா திரவ உயிர் உரங்கள் அரியலூர் மட்டுமின்றி தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உபயோகிக்கும் முறை

50 மி.லி. திரவ உயிர் உரத்தை தேவையான அளவு ஆறிய கஞ்சியுடன் ஒரு ஏக்கருக்கான விதையுடன் கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 100 மி.லி திரவ உயிர் உரத்தை தேவையான தண்ணீரில் கலந்து வேர் நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்திருந்து நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 200 மி.லி திரவ உயிர் உரத்தை 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் வயலில் இட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி திரவ உயிர் உரம் என்ற அளவில் விதைப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து 15, 30 மற்றும் 45 நாட்களில் உபயோகிக்க வேண்டும்.

Related Stories: