பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்பி. ஆகிறார் சுஷில் மோடி: பாஜ தலைமை அறிவிப்பு

பாட்னா: பீகாரில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேட்பாளராக சுஷில் குமார் மோடியின் பெயரை பாஜ அறிவித்துள்ளது.பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதில், பாஜ மட்டும் 74 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் 41 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இருப்பினும், பாஜ அவரை முதல்வராக்கியது.

இம்மாநிலத்தில் கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பாஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷில் குமார் மோடி துணை முதல்வராக இருந்தார். இம்முறையும் அவருக்கு அப்பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், பாஜவை சேர்ந்த தர்கிஷோர் பிரசாத், ரேணுதேவி துணை முதல்வர்களாக்கப்பட்டனர். இந்நிலையில், பீகாரில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக சுஷில் குமார் மோடியை  பாஜ அறிவித்துள்ளது. சமீபத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் இறந்ததால், இந்த இடம் காலியாக இருக்கிறது.

Related Stories: