நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு மத்திய அரசு செயல்பாடு சரியில்லை: உச்ச நீதிமன்றம் கடும் காட்டம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரித்து இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு செயல்பாடு கவலை அளிப்பதாக கூறியுள்ளது.இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிப்பது, தொற்றால் இறந்த நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல் ஆகியவை குறித்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:நாடு முழுவதும் சற்று குறைந்து இருந்த கொரோனாவின் தாக்கம், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலை அளிக்கிறது. இதைத் தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுத்ததா? என்ற கேள்வி எழுகிறது. முகக்கவசம் அணிய வேண்டும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என நாடு முழுவதிலும் அனைத்து விதமான பேரணிகளும், ஊர்வலங்களும் நடைபெற்று கொண்டுதான் வருகிறது. இருந்தாலும், பயன் இல்லை.

இனியாவது, கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.‘மொத்த கொரோனா பாதிப்பில் 77 சதவீதம், குறிப்பிட்ட 10 மாநிலங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18.9 சதவீத பாதிப்பு உள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறியதை அது ஏன் குறிப்பிடவில்லை? இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளும் உறுதியுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும், விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: