நிவர் புயல் முன்னெச்சரிக்கையால் படகுகள் நிறுத்தம் ரூ.20 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

நாகை: நிவர் புயல் முன்னெச்சரிக்கையால் நாகை மாவட்டத்தில் படகுகள் நேற்று வரை 4 நாட்கள் நிறுத்தப்பட்டதால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் ரூ.20 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். வங்க கடலின் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதிதீவிர புயலாக மாறக்கூடும். இதனால் நாகை, கடலு£ர், காரைக்கால், புதுச்சேரி, ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த 23ம் தேதி 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், 24ம் தேதி 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், 25ம் தேதி 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள 1500 விசைப்படகு மற்றும் 6 ஆயிரம் பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

கஜா புயலின் போது தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளை கருத்தில் கொண்டு அனைத்து படகுகளையும் மீன்வளத்துறையின் எச்சரிக்கையின் படி கரையில் பாதுகாப்பாக நிறுத்தினர். புயல் எச்சரிக்கைக்கு முன்பு ஆழ்கடல் சென்ற படகுகளும் கரையை திரும்பியது. நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டும் நேற்று மாலை வரை மீன்பிடிக்க ஆழ்கடல் செல்ல மீன்வளத்துறை சார்பில் படகுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் 4ம் நாளாக மீன்பிடிக்க மீனவர்கள் ஆழ்கடல் செல்லவில்லை. நிவர் புயல் எச்சரிக்கையின் காரணமாக மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் நாகை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மீன் சார்ந்த பிற தொழில்களும் முடங்கியதால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். நிவர் புயல் முன்னெச்சரிக்கையால் நாள் ஒன்றுக்கு நாகை மாவட்டத்தில் நேற்று வரை ரூ.5 கோடி வீதம் ரூ.20 கோடி வர்த்தகம் முடங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதை தவிர படகுகளில் பொருத்தியுள்ள இஞ்சின் மழையால் சேதம் அடையும். எனவே அதை சீர் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் இயற்கை சீற்றம் பாதிப்பை தந்துவிட்டது. இதில் இருந்து மீள்வதற்குள் அடுத்த புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இப்படி இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் கடல்சார்ந்த தொழில்களை காப்பாற்றுவது கடினமாகிவிடும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: