தூத்துக்குடி அருகே 600 கோடி போதை பொருள் கடத்தல் இலங்கையை சேர்ந்த 6 பேரிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் ₹600 கோடி மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை படகுடன்  கடலோர காவல் படையினர் தூத்துக்குடி அழைத்து வந்தனர். அவர்களிடம் தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய தென்பகுதி கடற்படை மற்றும் தூத்துக்குடி கடலோர காவல்படை தங்களுக்கு கிடைத்த தகவலையடுத்து கடந்த 24ம் தேதி மாலை   கன்னியாகுமரியில்  இருந்து தெற்கே 10 கடல் மைல் தொலைவில் இலங்கையை சேர்ந்த ‘சேனையா துவா’ என்ற படகை, வைபவ் கப்பலில் ெசன்று துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர். அந்த படகில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட ‘துரையா’ வகை  சேட்டிலைட் போன் மற்றும் 20 சிறிய பெட்டிகளில் சுமார் 9 கிலோ எடை கொண்ட ஐஸ் எனப்படும் கிறிஸ்டல்  மெத்தபட்டமைன் என்ற போதை பொருளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர அதன் உள்ளே 99 பாக்கெட்டுகளில் 99 கிலோ ஹெராயின் இருந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 590 கோடி. அத்துடன் 5 கைத்துப்பாக்கி, 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து படகின் கேப்டனான இலங்கை நீர்கொழும்புவை சேர்ந்த நீந்துகுல சூர்ய சந்தமனுவேல்(50), வர்னகுலசூர்ய ஜீவன்(29),  லட்சுமணன்குமார்(37), வர்ணகுல சாந்த சுனிமான்(25), சமீரா(32), நிஷாந்த் கமகயே(46) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னையில் இருந்து வந்த என்சிபி தென்மண்டல இயக்குநர் புருனோ தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவர்கள் 6 பேரையும் தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் தெரியவந்த தகவல்:  போதை பொருட்கள் அனைத்தும் ஈரான் நாட்டில் இருந்து தான் பாகிஸ்தான்  கராச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பின்னர் கடந்த 13ம்தேதி அங்கிருந்து ஒரு பாய்மர படகு மூலம் பாரசீக வளைகுடாவை கடந்து, அரபிக்கடலில் இலங்கை கப்பலான சேனையாதுவாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.  பின்னர் அங்கிருந்து 14 நாட்கள் கடலில் வந்துள்ளனர். கன்னியாகுமரிக்கு தெற்கே சென்று கொண்டிருந்தபோதுதான் கடலோர காவல் படையினரிடம் சிக்கியுள்ளனர். அங்கிருந்து மேலும் 18 நாட்கள் தென்மேற்கில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலும் சில நாடுகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா?: கடத்தல் கும்பல் தங்கள் படகின் டீசல் தேவைக்காக இந்திய கடல் எல்லைக்குள் நெருங்கி வந்துள்ளனர். அவர்கள் செல்போன் அல்லது சாட்டிலைட் போன் மூலம் யாருக்கும் தொடர்பு கொண்டுள்ளனரா? யாரிடமாவது தமிழகத்தில் அல்லது கேரளத்தை சேர்ந்தவர்களிடம் பேசியுள்ளனரா? இதன் பின்னணியில் முக்கியப் பிரமுகர்கள் யாரும் உள்ளனரா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு

சர்வதேச போதை கும்பலுக்கும், எகிப்தை பிறப்பிடமாக கொண்ட, பாகிஸ்தானில் கடந்த 2012ம் ஆண்டு தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த அமைப்பு தங்களது நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ளவே இதுபோன்று கொடிய, விலை உயர்ந்த போதை பொருட்களை தொடர்ந்து கடத்தி வருகிறது என கூறப்படுகிறது. பாகிஸ்தானின் துப்பாக்கிகள் கடத்தல் கும்பல் வைத்திருந்த துப்பாக்கிகள் எல்லாம் 9எம்எம் செமி ஆட்டோமேட்டிக் பிஸ்டல்கள். இவை அனைத்தும் பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டவை.

Related Stories:

>