டாப்சிலிப், குரங்கு அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ2கோடி வருவாய் இழப்பு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளில் ஒன்றான உலாந்தி வனச்சரகத்திற்குட்பட்ட டாப்சிலிப்புக்கு, தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டில் துவக்கத்திலிருந்து மழையில்லாததால், டாப்சிலிப்பில் யானை சவாரி தொடர்ந்திருந்தது. வெயிலின் தாக்கத்தால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் துவக்கம் வரையிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், ஒரு கும்கி யானையே சவாரிக்கு பயன்படுத்தப்பட்டது. மார்ச் மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமானது.

ஆனால், மார்ச் 25ம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் போனது. மேலும், அங்குள்ள தங்கும் விடுதியும் மூடப்பட்டு வெறிச்சோடியது. ஒவ்வொரு ஆண்டிலும் பள்ளி கோடை விடுமுறை நாட்களின் போது, டாப்சிலிப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் ஒரு மாதத்தில் சுமார் ரூ.10 லட்சம் வரையிலும் வசூலாகும். இந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பால், கடந்த 8 மாதமாக வருவாய் இழப்பு அதிகமாகியுள்ளது. டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், பகல் நேரத்திலேயே வன விலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருவது அதிகரித்துள்ளது.

அதுபோல், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அனுமதி மறுப்பால், தடையை மீறி யாரேனும் குளிக்க செல்கின்றார்களா என கண்காணிக்கப்படுகிறது. இப்படி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப், குரங்கு அருவி, மானாம்பள்ளி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் தடை நீட்டிப்பால், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கபெறும் சுமார் ரூ.2 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: