இந்திய நிறுவனங்களின் பங்கு வெளியீடு சாதனை; உலக அளவில் முதலிடம் பிடித்தது இந்தியா: நிதி திரட்டும் அளவும் பலமடங்கு உயர்வு

 

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்டுவது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து, உலக அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2015 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்திய நிறுவனங்களின் சராசரி பொதுப் பங்கு வெளியீட்டு (ஐபிஓ) அளவு ரூ.1,100 கோடியாக இருந்தது. ஆனால், முதலீட்டாளர்களின் அபாரமான ஆதரவு காரணமாக 2020 முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த அளவு கணிசமாக உயர்ந்து ரூ.1,570 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2025ம் ஆண்டில் மட்டும் மெயின்போர்டு ஐபிஓக்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது. ஆரம்ப கால முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்காக மட்டுமின்றி, நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டவே தற்போது பங்கு வெளியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அந்நிய முதலீடுகளை மட்டுமே நம்பியிருக்காமல், உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகள் என அனைத்துத் துறைகளிலும் முதலீடுகள் குவிந்துள்ளன.

குறிப்பாக ரூ.1,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையிலான நடுத்தர வகை பங்கு வெளியீடுகள் 68 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் நடைபெறும் மொத்த பங்கு வெளியீடுகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் மூலம் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், திரட்டப்பட்ட மொத்த நிதியின் மதிப்பின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்குப் பின் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் டாடா கேபிடல் நிறுவனம் ரூ.15,510 கோடியும், எச்.டி.பி. பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ரூ.12,500 கோடியும் திரட்டியது இந்திய சந்தையின் வலிமையை உணர்த்துவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: