ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,360 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.23,000 சரிந்தது; புத்தாண்டு நேரத்தில் விலை குறைவால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.3360 குறைந்தது. இதே போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.23 ஆயிரம் குறைந்தது. கடந்த 15ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120 என்ற இமாலய உச்சம் கண்டது. தங்கம், வெள்ளி என இரண்டும் ஒரே நேரத்தில் உயர்ந்ததால் நகை வாங்குவோர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி வந்தனர். கடந்த சனிக்கிழமை(27ம் தேதி) தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.1680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,04,800க்கு விற்பனையானது.

இதே போல வெள்ளியும் காலை, மாலை என ஒரே நாளில் கிலோவுக்கு 31 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.85 லட்சத்துக்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென குறைந்தது. வாரத்தின் தொடக்க நாளிலேயே தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.13,020க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,160க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.281க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

தொடர்ந்து விலையேற்றத்துக்கு பிறகு, இந்த விலை குறைவு என்பது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்தது. இந்த நிலையில் நேற்றும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது. அதுவும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடியாக சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600க்கும், பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்கு 800க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக குறைந்தது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.258க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை போட்டிப்போட்டு உயர்ந்து கொண்டு வந்த நிலையில், தற்போது விலை குறைந்து வருவது நகை பிரியர்கள், இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. அதே நேரத்தில் நாளை ஆங்கில புத்தாண்டு, தொடந்து பொங்கல் பண்டிகை என்று வருகிறது. அதே நேரத்தில் வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட முகூர்த்த தினங்களும் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது அவர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: தங்கம் விலை இப்படி ஏறும் போது ஒரு பிரேக் ஏற்படும். சொல்ல போனால் கரெக்சன் என்பது ஏற்படுவது வழக்கம். அதாவது, விலை அதிரடியாக குறையும். அதே போல இன்று(நேற்று) தங்கம் விலை குறைwந்துள்ளது. இந்த விலை குறைவு என்பது நிரந்தரம் இல்லை. மீண்டும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த போது கடைகளில் விற்பனை என்பது பாதிக்கப்படவில்லை. இன்னும் விலை அதிகரிக்கும் என்று நினைத்து நகையை வாங்குபவர்கள் வாங்கி கொண்டு தான் இருந்தார்கள். இன்னும் சிலர் விலை குறையட்டும் என்று காத்திருந்தும் வந்தனர். தங்கத்தின் முதலீட்டை குறைந்த கால முதலீட்டாக பார்க்க கூடாது. நீண்ட கால முதலீட்டாக தான் பார்க்க வேண்டும். தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பெஸ்டாக தான் இருக்கும். அதன் பலன் எப்போதும் பலனுள்ளதாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: