சுரண்டையில் நள்ளிரவில் பாம்பு கடித்த இளம்பெண்ணை காப்பாற்றிய போலீஸ் ஏட்டு: பொதுமக்கள் பாராட்டு

சுரண்டை: சுரண்டையில் நள்ளிரவில் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய  இளம்பெண்ணை மனிதாபிமானத்துடன் போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்று  மருத்துவமனையில் சேர்த்த ஏட்டு சமுத்திரக்கனியை பொதுமக்கள் பாராட்டினர். சுரண்டை சிவகுருநாதபுரம் பாறையடி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரம்யா (27). கடந்த 22ம்தேதி நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மின்சாரம் தடைபட்டதால் வீட்டுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது ரம்யாவை பாம்பு கடித்துள்ளது‌. அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சுரண்டை போலீஸ் நிலைய ஏட்டு சமுத்திரக்கனி, அவர்களிடம் விசாரித்த போது நிலைமையை கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்களை உடனடியாக சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படும் நிலையில் டாக்டர் இல்லாததால் செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனால் அவர்கள், பாம்பு கடித்தவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளனர்‌. ஆனால் தென்காசி அரசு மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ், ஆட்டோ, வாடகை கார் எதுவும் நள்ளிரவில் கிடைக்காத நிலையில் காவல்துறை உயரதிகாரிகள் அனுமதியுடன் போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்று அதிகாலை 2.10 மணிக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து கூடவே இருந்து உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் பாம்பு கடியில் அவதிப்பட்ட ரம்யா தற்போது நலமுடன் உள்ளார். நள்ளிரவில் பாம்பு கடித்து உயிருக்கு போராடிய இளம்பெண்ணை மனிதாபிமானத்துடன் போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்த ஏட்டு சமுத்திரக்கனியை பொதுமக்கள் பாராட்டினர். இவர் ஏற்கனவே கொரோனா காலத்தில் பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் மாவட்ட ஆட்சித் தலைவரால் சிறந்த காவலர் என  கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேர மருத்துவமனை தேவை

தென்காசி மாவட்டத்தில் சுரண்டை வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நகரம். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சுரண்டை மற்றும் அதனைச்சுற்றி உள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அவசர சிகிச்சைக்காக தென்காசிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் திமுக ஆட்சிக்காலத்தில் 54 படுக்கை கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்பு மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. சுரண்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக தரம் உயர்த்தி விபத்து உள்ளிட்ட அனைத்து அவசர சிகிச்சைகளுக்கும் மருத்துவம் பார்க்கும்படி மருத்துவமனையை தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>