புயல் வேகத்தை விட மின்வாரியம் வேகமாக செயல்பட்டு கடலூரில் பெருமளவு பாதிப்பை குறைத்துள்ளது: சென்னையில் அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: புயலால் தற்போது வரை ரூ.1.5 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மழைநீர் அதிகரித்து சாலைகள், குடியிருப்புகளில் புகுந்தது. சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் நேற்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளக்பெருக்கு ஏற்பட்டது.

நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி - காரைக்கால் இடையே கரையை கடந்தது. அப்போது 100 கி.மீ. வேகத்தில் புயல் காற்றும், கனமழையும் பெய்தது. புதுச்சேரி மட்டுமின்றி கடலூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் காற்று காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. பல இடங்களில் மின்சாரம் நடைபட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; புயலால் தற்போது வரை ரூ.1.5 கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக மின்வாரியம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. நிவர் புயலால் 144 மின் கம்பங்கள் மட்டுமே சாய்ந்துள்ளன; பாதிக்கப்பட்ட இடங்களில் 80% மீட்பு பணிகள் இன்று இரவுக்குள் மின்விநியோகம் சீரமைக்கப்படும். தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் மட்டுமே மின் தடை ஏற்பட்டுள்ளது.  கடலூரில் இரவு 8 மணிக்குள் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று இரவுக்குள் மின் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும்.

கடலூர் மாவட்டத்துல 28 இடங்களில் மட்டுமே மின் விநியோகம் கொடுக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தான் மின்விநியோக பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் 177 இடங்களில் மின்விநியோகம் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. பெரும்பாக்கம், மடிப்பாக்கத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மின் இணைப்பு தர இயலாத சூழல் உள்ளது. மழைநீர் வடிந்த பிறகு படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்படும். சென்னையில் மாநகராட்சி மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு உடனுக்குடன் மின்சாரம் வழங்கப்படும். 1912 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் மின்வாரியம் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. பணியாளர்கள் நியமனம் செய்ததும் தனியாரிடம் உள்ள மின் நிலையங்கள் திரும்ப பெறப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: