வேணாம்... நியாயமில்லை: சீனா புலம்பல்

பீஜிங்: தனது நாட்டை சேர்ந்த 43 ஆப்களுக்கு இந்தியா தடை விதித்தததற்காக சீனா புலம்பியுள்ளது. கிழக்கு லடாக்கில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. 20 இந்திய வீரர்களை சீன ராணுவம் கொன்றதால் ஆத்திரமடைந்த மத்திய அரசு, அந்நாட்டை சேர்ந்த ஆப்களுக்கு படிப்படியாக தடை விதித்து வருகிறது. எல்லை மோதல் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா முயன்று வரும் நிலையில், ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் டோக்லாமில் சீனா சாலைகள் அமைத்திருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக இருதினங்களுக்கு முன் அம்பலமானது. இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக, அலிபாபா குழுமத்தின் இ காமர்ஸ் ஆப் உள்ளிட்ட 43 சீன செயலிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசு தடை விதித்தது.

இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த ஜூனில் இருந்து 4 முறை பல்வேறு சீன ஆப்களை இந்தியா தடை செய்துள்ளது. சர்வதேச வியாபார நெறிமுறைகளை இதன் மூலம் இந்தியா மீறியுள்ளது. சீன நிறுவனங்களின் சட்டரீதியான தொழில் உரிமைகளையும் பறித்துள்ளது. இந்த பாரபட்சமான நடவடிக்கைகளை இந்தியா உடனடியாக கைவிட வேண்டும். இரு  நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் பாதிக்காத வகையில், இனியாவது இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா தவிர்க்க வேண்டும்,’’ என்றார். ஏற்கனவே, கடந்த ஜூன் 29ம் தேதி 59 சீன ஆப்களுக்கும், செப்டம்பர் 2ம் தேதி 118 சீன ஆப்களுக்கும் மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>