கொரோனா ஊரடங்கால் உறவினர்களை பார்க்க தடை மன அழுத்த பிரச்னையால் 12 ஆயிரம் கைதிகள் அவதி: சிறப்பு ஏற்பாடுகளை செய்யும் சிறை நிர்வாகம்

சேலம்: கொரோனா ஊரடங்கால் உறவினர்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் 12 ஆயிரம் கைதிகள் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்காக சிறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.கொடுமை நோயான கொரோனா 2020ம் ஆண்டையே சீர்குலைத்து விட்டது. இதன்காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினர். கோவில் விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்துள்ள நிலையில் பஸ் போக்குவரத்து விடப்பட்டுள்ளது. கடைகளும் திறக்கப்பட்டு, மக்கள் வழக்கமான பணிக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், கடந்த 5 மாத அளவில் உறவினர்களை பார்க்க முடியாமல் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  தமிழகத்தில் சென்னை புழல், கோவை, வேலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை, கடலூர் ஆகிய மத்திய சிறைகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

ெகாரோனா பரவிய நேரத்தில், இவர்களை பார்க்க உறவினர்களுக்கு தடை விதிக்கப் பட்டது. அவ்வாறு பார்க்க அனுமதிப்பதன் மூலம் சிறை முழுவதும் நோய் பரவி விடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையும் தாண்டி சென்னை, கடலூர், மதுரை, ஆகிய மத்திய சிறைகளில் 50க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா பரவியது. பின்னர்  அவர்கள் நோயிலிருந்து மீட்கப்பட்டனர்.ஆனால் கைதிகள், உறவினர்களை பார்க்க முடியாத நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர்களுடன் பேசும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து சிறைகளிலும் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உறவினர்களுடன் பேசிவந்தனர்.இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், அனைத்து விதிமுறைகளும் தளர்வு செய்யப்பட்டுள்ளதால், சிறை கைதிகளும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து கைதிகள் கூறுகையில், கொரோனா பரவிய நேரத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உறவினர்களிடம் பேசிவந்தோம். குழந்தைகள் மற்றும் பெற்றோரை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது. எனவே தளர்வு செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் மனஅழுத்ததிற்கு ஆளாவோம்’ என்றனர்.இந்த நிலையில் தினமும் குறைந்த அளவு கைதிகளை உறவினர்கள் பார்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வழக்கமாக கைதிகளை பார்க்கும் மனு பார்க்கும் இடத்தில் 10 கைதிகள் அழைத்து வரப்படுவார்கள். அவர்களை பார்க்க  30 உறவினர்கள் வந்திருப்பார்கள். இரு வலைகளுக்கு இடையே  இருதரப்பினரும் பேசிக்கொள்வார்கள். ஆனால் யார் ேபசுவதும் யாருக்கும் கேட்காது. ஆனால் தற்போது அதே கைதிகள் மனு பார்க்கும் இடத்தில் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய சிறைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி குறைவான கைதிகளை, குறைந்த அளவு உறவினர்களே பார்க்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்படுகிறது. இதற்காக சிறைக்கு தலா ₹40  ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். விரைவில் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: