புதுச்சேரியில் நிவர் புயல் எதிரொலி நாளை காலை வரை 33 மணி நேரம் 144 தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக, நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நிவர் புயல் இன்று (25ம் தேதி) பிற்பகலில் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் 120 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என்பதால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலையொட்டி புதுச்சேரி கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. பல அடி உயரத்துக்கு கடல் அலை வீசுகிறது. இதனால் புதுச்சேரி கடற்கரை சாலை நேற்று பேரிகார்டு வைத்து மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையும் மீறி சுற்றுலா பயணிகள் சிலர், கடற்கரையோரம் நின்று செல்பி எடுத்தனர். போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, முதல்வர் நாராயணசாமி, நேற்று காலை கடற்கரைக்கு சென்று பார்வையிட்டார். நிவர் புயல் தீவிரம் அடைந்து வருவதால் புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று காலை ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தேங்காய்திட்டு துறைமுகத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேருந்து, ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள புதுச்சேரியில் அனைத்து அரசு துறைகளும் தயார்படுத்தப்பட்டு உள்ளன. மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 35 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் நேற்று முன்தினம் இரவே புதுச்சேரி வந்து விட்டனர்.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கலெக்டர் பொறுப்பு வகிக்கும் சுற்றுலாத்துறை செயலர் பூர்வா கர்க் தலைமையில் அதிகாரிகள் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் செயலர் பூர்வா கர்க் வெளியிட்டுள்ள உத்தரவில், நிவர் புயல் காரணமாக பொது இடங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 24ம் தேதி (நேற்று) இரவு 9 மணி முதல் நாளை (26ம் தேதி) காலை 6 மணி வரை 33 மணி நேரம் 144 தடை உத்தரவு அமலாகிறது.

அனைத்து கடைகளும் மூடியிருக்க வேண்டும். பேரிடர் பணிகளில் ஈடுபடுவோர், பாண்லே பால் பூத், பெட்ரோல் பங்க், மருந்தகங்கள், சுகாதார சேவை பணியில் ஈடுபடுவோருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஆலோசனை: பிரதமர் மோடி நேற்று காலை முதல்வர் நாராயணசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போது, புயல் பாதிப்புகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும், உயிர் சேதம் ஏற்படாதவாறு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>