திருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை: விமான நிலையத்தில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு.!!!

சென்னை: திருப்பதி செல்லும் வழியில் சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு அளித்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதாவும் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கின்றர். இதற்காக இன்று காலை 6.30 மணிக்கு டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 10.00 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, சென்னையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர், காரில் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து, ராணுவ ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை சென்னை வருகிறார்.

அப்போது அவரை தமிழகம் சார்பில் வரவேற்று, வழியனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து, சென்னையில் இருந்து தனி விமானத்தில் மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவில்லை. இருப்பினும், ஆனாலும் மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்திலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: