உயர்மின் கோபுரத்திற்கு எடுத்த நிலத்திற்கு இழப்பீடு கேட்டு தர்மபுரி கலெக்டர் ஆபீசில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி: தர்மபுரி அருகே, பவர்கிரிட் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி மனைவியுடன் வந்த விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே கோரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி(35). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சின்னசாமியின் விவசாய நிலத்தை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உயர் மின்பாதை அமைப்பதற்காக பவர் கிரிட் நிறுவனத்தினர் எடுத்துக் கொண்டனர். தனது நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை குறைவாக இருப்பதாக கூறி, உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில் சின்னசாமி பலமுறை மனு செய்தார். ஆனால், அவரது மனுவின் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.

இதனால், மனவேதனையடைந்த சின்னசாமி, நேற்று தனது மனைவி மகேஸ்வரி மற்றும் குழந்தையுடன், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, அவர் தனது பையில் கேனில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் சின்னசாமியை தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை விசாரணைக்காக தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: